விளையாட்டு விபரீதமாகிறது.. சுடுடா அவனை.. காப்பாத்துடா என்னை.. ! - EThanthis

Recent Posts


விளையாட்டு விபரீதமாகிறது.. சுடுடா அவனை.. காப்பாத்துடா என்னை.. !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
சுடுடா அவன! காப்பாத்துடா என்ன!" இவை வேறொன்றும் இல்லை, பப்ஜி விளையாட்டை விளையாடும் சிறுவர்கள் பெரிதும் பயன்படுத்தும் வார்த்தைகள் தான்.
பப்ஜி விளையாட்டு விபரீதமாகிறது
இது போன்ற வார்த்தைகளின் மூலம் அவ்விளையாட்டினை விளையாடும் சிறுவர்களின் மனதில் ஏற்படும் வன்முறை எண்ணத்தை நம்மால் அறிய முடிகிறது.
விளையாட்டு என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மட்டுமே. ஆனால் பப்ஜி விளையாட்டு மனதில் வன்மத்தை விதைத்து, மன அழுத்தத்திற்கு கொண்டு செல்கிறது. 

இவ்விளையாட்டை தடை செய்யக் கோரி பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். எனவே பப்ஜி விளையாட்டை அலசி, ஆராய்ந்துப் பார்க்கவே இத்தொகுப்பு.

பப்ஜி - ஓர் அறிமுகம்:
பப்ஜி - ஓர் அறிமுகம்
பப்ஜி (பிளேயர் அன்நோன்ஸ் பேடில்கிரவுண்ட்) விளையாட்டு நம் இளம் தலைமுறையினர் விளையாடும் இணையதள விளையாட்டுகளுள் மிகவும் பிரபலமான விளையாட்டாகும். 

நாள்தோறும் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தென் கொரிய நிறுவனமான "ப்ளூஹோல்" நிறுவனத்தின் கிளை நிறுவனமான பப்ஜி நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்த பப்ஜி விளையாட்டு. கிரீன் என்பவரால் உருவாக்கப்பட்ட இவ்விளையாட்டானது மைக்ரோசாப்ட், ஆண்ட்ராய்டு, ஐஒஸ், 

எக்ஸ்பாக்ஸ் ஒன் மற்றும் ப்ளே ஸ்டேஷன் போன்ற தளங்களில் இயங்குகிறது. பப்ஜி விளையாட்டு கிரீனி உருவாக்கிய முதல் தனி நபர் விளையாட்டாகும்.

பப்ஜி விளையாட்டில் நூறு நபர்கள் ஒரே சமயத்தில் விளையாட இயலும்.

விளையாட்டு வீரர் தான் தனியாக விளையாட வேண்டுமா அல்லது இரண்டு வீரர்களுடன் சேர்ந்து கொண்டா அல்லது குழுவாக விளையாட வேண்டுமா என்பதை தானே தீர்மானிக்க இயலும். 

ஒரு குழுவில் அதிகபட்சமாக நான்கு வீரர்கள் பங்கு பெறலாம். வீரர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டே விளையாடும் அம்சமும் இதில் இடம் பெற்றுள்ளது.

வீரர்கள் வான்குடை (பாராசூட்) மூலம் ஒரு தனித் தீவில் விடப்படுகின்றனர். அங்கிருக்கும் ஆயுதங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி மற்றவர்களைக் கொன்றுத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

விளையாட்டின் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க பாதுகாப்பு மண்டலங்களின் அளவு சுருங்கத் தொடங்கும். 
இறுதி வரை உயிரோடு இருக்கும் நபர் அல்லது அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றிக்கு பரிசாக கோழி இரவு உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.

பப்ஜியின் எதிர்மறை பாதிப்புகள்:
பப்ஜியின் எதிர்மறை பாதிப்புகள்
பப்ஜியில் இடம் பெற்றிருக்கும் அதிக பட்சமான வன்முறை, விளையாடும் நபரின் கோப உணர்வைத் தூண்டுவதால் அவர்கள் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மீண்டும் மீண்டும் விளையாடும் எண்ணத்தை உருவாக்கி விளையாட்டிற்கு அடிமையாக்குகிறது இவ்வகையான அடிமைத்தனத்தை உலக சுகாதார நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மன நல கோளாறு என்று குறிப்பிடுகிறது. 

ஒரு சுற்று விளையாட்டிற்கு குறைந்தது ஒரு மணி நேரம் தேவைப்படும். நாளொன்றுக்கு குறைந்தப்பட்சம் மூன்று சுற்று விளையாடினால் கூட குறைந்தது நான்கு மணி நேரம் விரயமாகக் கூடும்.
நீண்ட நேரம் கைப்பேசியிலோ அல்லது கணினியிலோ விளையாடுவதால் ஒழுங்கற்ற தூக்க முறையை ஏற்படுத்தி விடுகிறது. மன அழுத்தத்தோடு, உடல் நலமும் அதிக அளவில் பாதிப்படைகிறது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதால் உடல் பருமன், ஒழுங்கற்ற உணவு பழக்க வழக்கங்கள் போன்றவை ஏற்படுகிறது. 

இவ்விளையாட்டினைத் தொடர்ந்து விளையாடுவதால் பார்வை கோளாறு, மனச் சோர்வு, சோம்பல் போன்றவை எளிதில் தாக்கி விடும். 

நண்பர்களுடன் உரையாடிக் கொண்டே விளையாடுவதால் தங்களைச் சுற்றியிருக்கும் நபர்களையும், சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் புறக்கணித்து விட்டு பப்ஜி விளையாட்டு உலகிற்குள் சென்று விடுகின்றனர்.

தொடர்ந்து இவ்விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதால் படிப்பின் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கவனச் சிதறல்களும் ஏற்படுகிறது. 

விளையாட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் உயர்வகைத் துப்பாக்கிகளின் பெயர்களையும் நன்கு அறிந்து கொள்கின்றனர். 

இது அவர்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான தகவல்களாக அமையப் போவதுமில்லை, நன்மைகளை விளைவிக்கப் போவதுமில்லை.

பப்ஜி விளையாட்டில் கைகளையும் மூளையையும் ஒருங்கிணைத்து எதிரிகளை சுட்டு வீழ்த்தும் போது மூளையின் செயல்திறன் தூண்டப்படுகிறது. 

மேலும் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படும் திறனை ஊக்குவிக்கவும் உதவுகிறது. 

இது போன்ற ஆக்க பூர்வமான நன்மைகளை உள்ளடக்கி யிருந்தாலும், "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்னும் பழமொழிக்கேற்ப அளவு கடந்து விளையாடும் போது மேற் கூறிய அனைத்து நன்மைகளும் நஞ்சாக மாறிட நேர்கிறது.
பப்ஜிக்கு தடை ஏன்:
பப்ஜிக்கு தடை ஏன்
தொடர்ந்து ஆறு மணி நேரம் பப்ஜி விளையாடிய மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். 

மருத்துவ பரிசோதனையில் அதீத உணர்ச்சி வயப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இம்மரணம் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதே போல் இம்மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் தொடர்ந்து பல மணி நேரம் பப்ஜி விளையாட்டை விளையாடிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

பரிசோதனையில் அதீத உற்சாகம் காரணமாக மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது . 
நாம் அதீத உணர்ச்சி வயப்படும் போது "அட்ரீனலின்" என்ற ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த அதிக அளவு சுரப்பானது மூளையை பாதித்து இதயத் துடிப்பையும் அதிகரிக்கக் கூடும். 

இது போன்ற சமயத்தில் தான் மரணிப்பது போன்ற விபரீத நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாய் தன் மகன் பப்ஜி விளையாட்டில் நீண்ட நேரம் செலவழிப்பதால் கைப்பேசியைத் தர மறுத்துள்ளார். 

இதற்காக அவர் மகன் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளான். தொடர்ந்து பல மணி நேரம் குனிந்த நிலையில் கைப்பேசியில் விளையாடியதால் கழுத்து. 

பகுதி நரம்புகள் பாதித்த நிலையில் சிகிச்சையின் போதே மரணத்தை தழுவியுள்ளான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவன். இது போன்று பல நிகழ்வுகள் நம் நாட்டில் மட்டுமன்றி பல நாடுகளிலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

எங்கெல்லாம் தடை:
எங்கெல்லாம் தடை
இந்த விளையாட்டிற்கு பல பேர் அடிமையானதாலும், உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுவதாலும் சில நாடுகள் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்தன. இதனை முதலில் தடை செய்தது சூரத் நகரமாகும். 

அதன்பின் தொடர்ச்சியாக இந்தியாவிலுள்ள சில மாநிலங்களும், நகரங்களும் இந்தத் தடையை அமலுக்கு கொண்டு வந்தன. மேலும் சீனா, ஈராக், நேபாளம், ஜோர்டான் ஆகிய நாடுகளும் பப்ஜி விளையாட்டை தடை செய்தன.
இவ்விளையாட்டைக் குறித்து எழுந்த தொடர் புகார்களினாலும், உடலுக்கும், மனதுக்கும் கேடு விளைவிக்கும் விதமாக 

இவ்விளையாட்டு அமைந்திருப்பதால் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரக்குழு பப்ஜி விளையாட்டிற்கு தற்காலிக தடை விதித்தது. 

இவை மட்டுமல்லாமல் தேசிய குழந்தை உரிமைகளை பாதுகாக்கும் கமிஷனும் இவ்விளையாட்டினைத் தடை செய்ய பரிந்துரை செய்துள்ளது. 

இவையனைத்தையும் அறிந்தும் பப்ஜி விளையாட்டிற்கான பூரணத் தடையை இப்போது வரை அமல்படுத்தவில்லை.

இந்தியா முதல் இடம்:
இந்தியா முதல் இடம்
உலகிலேயே பப்ஜியை அதிக அளவில் பதிவிறக்கம் செய்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. மேலும் பப்ஜி விளையாட்டை சிறுவர் மட்டுமன்றி சிறுமியரும் விளையாட அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இவ்விளையாட்டினை நீண்ட நேரம் தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் தீங்கினால் எழுந்த புகார்களைத் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. 

அதாவது தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே இதனை விளையாட இயலும் என்ற வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 
ஆனால் இது கைப்பேசிக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் இந்தியாவில் மட்டுமே இந்த நேரக் கட்டுப்பாடு என்பதும் குறிப்பிடத்தக்கது.

பப்ஜி விளையாட்டை உருவாக்கிய நிறுவனத்தைப் பயனடைய வைத்து விட்டு அதற்கு பதிலாக பல வகை இன்னல்களை நமக்கு நாமே பெற்றுக் கொண்டுள்ளோம். 

அரசு இவ்விளையாட்டினைத் தடை செய்ய வேண்டும் என்று ஆதங்கமும், எதிர்பார்ப்பும் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் இளம் தலைமுறை யினருக்கு 

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் (மாணவர்களின் நலனில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள்) முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

அவ்வாறு செய்தால் பப்ஜி விளையாடினால் ஏற்படும் விபரீதங்களைப் பெருமளவில் தடுக்க இயலும்.... ONEINDIA
விளையாட்டு விபரீதமாகிறது.. சுடுடா அவனை.. காப்பாத்துடா என்னை.. ! விளையாட்டு விபரீதமாகிறது.. சுடுடா அவனை.. காப்பாத்துடா என்னை.. ! Reviewed by Fakrudeen Ali Ahamed on August 02, 2020 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 EThanthis All rights reserved
close